tamilnadu

img

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து - அமித்ஷா அராஜக அறிவிப்பு

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவை  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அராஜகமான மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காஷ்மீரை 3 ஆக பிரித்து, ஜம்மு மாநிலம், காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள அரசியல் சாசன சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை ரத்து செய்ய முடிவு எடுத்து உள்ளதாகவும், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையின்போது வெளியிடக்கூடும் எனவும் தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 
இதற்கிடையே காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயன்றால் பெரும் போராட்டம் வெடிக்கும் என, காஷ்மீர் அரசியல் தலைவர்கள் எச்ச ரித்துள்ளனர்.   இந்நிலையில் ஞாயிறன்று நள்ளிரவில் ஜம்முவின் துணை ஆணையாளர் சுஷ்மா சவுகான் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அளிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளார். மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன்படி ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் 4க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும்.  அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

ஜம்முவில் இணைய  சேவைகளும் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  அங்கு பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் படைகள் குவிக்கப்பட்ட சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 
காங்கிரஸ் கட்சி தலைவர் உஸ்மன் மஜித் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. எம்.ஒய். தாரிகாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் இன்று இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 1954 ம் ஆண்டிலிருந்து காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் வகையில் 370வது பிரிவு மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து மாநிலங்களவையில் பாஜக அரசின் எதேச்சதிராக போக்கினை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும்  அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இந்த சட்டத்திருத்தம் குறித்த மசோதா நகல் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இதுகுறித்த மதியம் 1 மணிக்குள் எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சபாநாயகர் வெங்கையநாயுடு தெரிவித்தார். சபாநாயகரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.